அரசின் இறப்பு தகவல் படி ஜனவரி 1 முதல் ஜூன் 25, 2021 வரை 1,42,143 கூடுதல் இறப்புகள் நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது

தமிழ்நாடு அரசின் civil registration system (CRS) என்று சொல்லப்படும் பிறப்பு இறப்பு எண்ணிக்கை ஆவணப்படி ஜனவரி 1, 2021 முதல் ஜூன் 25, 2021 வரை நடந்துள்ள இறப்புகளை 2019 ன் அதே கால கட்டத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் 1,42,143 கூடுதல் இறப்புகள் நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால் மற்றொரு புறம் தமிழ்நாடு அரசு ஜனவரி 1 முதல் ஜூன் 25, 2021 வரை 19,929 கொரோனா இறப்புகள் தான் நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு 26/05/2021 அன்று தமிழ்நாடு அரசின் CRS தகவல் படி 2,92,796 இறப்புகள் நடந்ததாக கூறப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த 30 நாட்களில் மட்டும் 1,56,528 இறப்புகள் இதில் சேர்க்கப்பட்டு 25/06/2021 இறுதி படி 4,49,324 இறப்புகள் ஜனவரி 1 முதல் ஜூன் 25 வரை நடந்து இருப்பதாக அரசின் இணையதளம் தெரிவிக்கிறது. இதை நீங்களே http://www.crstn.org/birth_death_tn/MisRep.jsp என்ற அரசின் இணையதளத்தில் உறுதி செய்து கொள்ளலாம். அல்லது நாம் இணைத்துள்ள ஆவணங்கள் மூலமாகவும் உறுதி செய்து கொள்ளலாம்.

ஏற்பட்ட அதிகப்படியான இறப்புகளில் பெரும்பாலானவை மே 2021 ல் நடந்துள்ளது என்பதையும் இது உறுதி செய்கிறது. இந்த தகவல்களின் படி ஜனவரி முதல் ஜூன் 25 2021 வரை, அரசு சொன்ன கொரோனா இறப்புகளை காட்டிலும் அதிகப்படியான இறப்புகள் 7.13 மடங்கு உள்ளத்தை காட்டுகிறது.

ஜனவரி முதல் ஜூன் 25, 2021 வரை நடந்த இந்த 1,42,143 கூடுதல் இறப்பு கணக்கானது அறப்போர் இயக்கம் ஏப்ரல் மே மாதங்களில் மட்டும் 1,08,721 முதல் 1,26,841 வரை கூடுதல் இறப்பு நடந்திருக்க கூடும் என்று வெளியிட்ட ஆய்வறிக்கை முடிவுகளையும் உறுதி செய்துள்ளது. கொரோனா மிக குறைவாக இருந்த ஜனவரி முதல் மார்ச் மாதங்களில் அதிகப்படியான இறப்புகளும் மிக குறைவு என்பதை ஏற்கனவே நாம் ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளோம். எனவே இந்த 1,42,143 அதிகப்படியான இறப்புகள் பெரும்பாலும் ஏப்ரல் முதல் ஜூன் 2021 ல் தான் நடந்துள்ளது என்பதும் முக்கியமாக இது பெரும்பாலும் இரண்டாம் அலை அதிகமாக இருந்த மே மாதத்தில் தான் நடந்தது என்பதும் உறுதி ஆகிறது. அறப்போர் இயக்கம் ஏற்கனவே நம் ஆய்வறிக்கையை முதலமைச்சர், சுகாதார துறை அமைச்சர் மாறும் தலைமை செயலருக்கு அனுப்பி உள்ளோம். இப்பொழுது அவர்களின் தகவலே மிகத்தெளிவாக கூடுதல் இறப்புகளை தெரிவித்துள்ள நிலையில், அரசு உடனடியாக ஒரு தன்னிச்சையான ஆய்வுக்கு அனைத்து இறப்புகளையும் உட்படுத்தி கொரோனா இறப்பு எண்களை திருத்த வேண்டும். மேலும் ஒரு எளிமையான குறை தீர்ப்பு வழி மூலம் WHO/ICMR கொரோனா இறப்பு குறியீடு U07.1 and U07.2 படி இறப்பின் காரணங்களை Medical certification for cause of death (MCCD) ஆவணங்களில் சரி செய்ய வேண்டும். இது செய்யாவிட்டால் தன் தாயோ தந்தையோ இழந்த குழந்தைகள் அரசின் இழப்பீடு தொகைகளை பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்படும். அவர்களது இறப்பு காரணம் கொரோனா என்று குறிப்பிட படாததால் அவர்களுக்கு இழப்பீடு கிடைக்காமல் போகும் சூழ்நிலை உருவாகும். எனவே அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்த வேண்டும்.

அதிக இறப்புகள் கணக்கு செய்த முறை: கொரோனா இல்லாத வருடமான 2019ல் அரசு CRS இறப்பு தகவல் படி 637051 இறந்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளது. இதை ஜனவரி 1 முதல் ஜூன் 25 2019 வரை கணக்கிட்டு பார்த்ததால் கிட்டத்தட்ட 3,07,181 இறப்புகள் நடந்ததாக தெரிகிறது. 2021 ல் இதே கால கட்டத்தில் 4,49,324 இறப்புகள் நடந்துள்ளது. எனவே 2019 உடன் ஒப்பிடுகையில் ஜனவரி 1 முதல் ஜூன் 25 வரை 1,42,143 கூடுதல் இறப்புகள் 2021ல் நடந்துள்ளது என்பது தெரிகிறது .