வில்லிவாக்கம் ஏரியை மீட்க அறப்போர் இயக்கத்தின் வெற்றிகரமான சட்ட போராட்டம்:

Villivakkam Lake 8.png

214 ஏக்கர் கொள்ளளவு கொண்ட வில்லிவாக்கம் ஏரி காலப்போக்கில் பல்வேறு ஆக்கிரமிப்புகளாலும், சுற்றுச்சூழல் மீது அக்கறை இல்லாத அரசாங்கங்களாலும் 39 ஏக்கராக சுருங்கியது. மீதம் இருந்த 39 ஏக்கர் ஏரியையும் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மண் அள்ளி போட்டு நிரப்பி பேருந்து நிலையம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசாங்கம் திட்டமிட்டது. 2015 வெள்ளத்தின் போது இந்த ஏரி உள்ளே தண்ணீர் போக முடியாததால் ஏரியை சுற்றியுள்ள பகுதிகள் வரலாறு காணாத வெள்ளத்தில் மூழ்கின. இந்த ஏரியை மூடியதால் தான் வெள்ளம் ஏற்பட்டது என்று அந்த பகுதி மக்கள் புகார் அளிக்க அறப்போர் களத்தில் இறங்கியது.

2016ம் ஆண்டு அறப்போர் தன்னார்வலர்கள் வில்லிவாக்கம் ஏரியை ஆய்வு செய்தனர். RTI மூலம் பல தகவல்கள் வாங்கப்பட்டன. இவற்றை வைத்து அறப்போர் தொடர்ந்த வழக்கின் காரணமாக பசுமை தீர்ப்பாயம் இந்த ஏரியை சீரமைக்க அதிமுக அரசுக்கு உத்தரவிடுகிறது. இதற்கான திட்டத்தை சென்னை மாநகராட்சி தயாரிக்கிறது. ஆனால் 39 ஏக்கர் ஏரியை முழுமையாக சீரமைக்காமல் வெறும் 17 ஏக்கர் பகுதி மட்டுமே ஏரியாக மாற்றப்படுகிறது. 10 ஏக்கர் ஏரி பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றப்படுகிறது. 11.5 ஏக்கர் ஏரி சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகத்தால் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பயன்படுத்தப்படும் என்று அரசாங்கம் தெரிவிக்கிறது.

ஏரியை முழுமையாக சீரமைக்காமல் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கபடுவதை எதிர்த்து அறப்போர் இயக்கம் மீண்டும் நீதிமன்றத்தில் முறையிடுகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக அரசு பதவி ஏற்கிறது. அதிமுக அரசின் அதே நிலைப்பாட்டை திமுக அரசும் தொடர்கிறது. அறப்போர் முறையீட்டை விசாரிக்கும் பொருட்டு பசுமை தீர்ப்பாயம் சென்னை மாநகராட்சியின் பொழுதுபோக்கு பூங்கா பணிகளுக்கு தடை விதிக்கிறது. விசாரணையின் முடிவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 3 ஏக்கர் ஏரி நிலத்தை ஒதுக்கி தீர்ப்பு அளிக்கிறது. மீதம் உள்ள 8.5 ஏக்கர் நிலத்தை மெட்ரோ வாட்டர் நிர்வாகத்திடம் இருந்து திரும்ப பெற்று அதையும் ஏரியாக மாற்ற வேண்டும் என்று உத்தரவிடுகிறது. பொழுதுபோக்கு பூங்கா மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசாங்கம் எடுத்துக்கொண்ட 13 ஏக்கர் ஏரிக்கு பதிலாக 22 ஏக்கர் பரப்பில் புதிய ஏரியை உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கிறது.

6 வருட கடுமையான சட்ட போராட்டத்தின் மூலம் முழுமையான 39 ஏக்கர் எரியையும் மீட்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் 26 ஏக்கர் ஏரியை மீட்டு, 22 ஏக்கர் புதிய ஏரிக்கு வழிவகை செய்த இந்த வழக்கை நடத்தியதற்காக அறப்போர் இயக்கம் மிகவும் பெருமை கொள்கிறது. இதற்கு துணை நின்ற அறப்போர் தன்னார்வலர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.

நீங்களும் அறப்போர் இயக்கத்தில் இணைந்து உங்கள் பகுதியில் மக்கள் பணி செய்ய www.arappor.org/volunteer.php என்ற இணைப்பில் உங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள்.

அறப்போர் இயக்கத்தின் பணிகளை நிதி கொடுத்து ஆதரிக்க https://arappor.org/donate/ உங்களை அன்புடன் அழைக்கிறோம். உங்கள் சிறிய சிறிய நன்கொடைகள் மூலமாக தான் அறப்போர் இயக்கம் செயல்பட்டு வருகிறது.