சென்னை மாநகரம் என்பது இயற்கை தந்த வரம் .ஆனால் இப்போதோ நம்மால் சாபமாக மாற்றப்பட்டுள்ளது. அதன் காரணமாகத்தான் 2015ல் வெள்ளமும், இந்த வருடம் வறட்சியுமாக இருக்கிறது. உலகத்தில் உள்ள மற்ற நகரங்களை விட மூன்று ஆறுகளைக் கொண்ட இயற்கையின் கொடை சென்னை. அது மட்டுமல்ல அந்த ஆறுகளில் நீரைக் கொண்டு சேர்க்க 32 கால்வாய்கள் இயற்கையாகவே அமைந்துள்ளது(பக்கிங்ஹாம் கால்வாய் மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டது). ஆனால் இவை அனைத்தையும் கூவம் என்ற ஒரே சொல்லாடலில் நமது சென்னைவாசிகள் அழைப்பது மாபெரும் சோகம்.

சென்னையில் உள்ள எந்த ஒரு பகுதியின் மேம்பாலத்தை கடந்து போனாலும் மூக்கை பொத்திக் கொள்ள வைக்கும் துர்நாற்றமும், கீழே அழுக்கடைந்த கழிவு நீரும் ஓடுவதே நம்மால் பார்க்க முடிகிறது. இதனால்தான் நமது மக்களால் சென்னையின் எல்லா நீர் வழித்தடங்களையும் கூவம் என்றே அழைக்கத்தோன்றுகிறது.

சென்னை வடக்கே கொசஸ்தலையாரையும், மத்தியில் கூவத்தையும் ,தென் பகுதியில் அடையாறு ஆற்றையும் கொண்டது. அது மட்டுமல்ல அதை தாண்டி அரிதினும் அரிதான நன்னீர் சதுப்பு நிலமான பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை கொண்டது. சென்னை 4 நீர்ப்பிடிப்பு பகுதிகளை கொண்ட அழகிய நகரம். நீர்பிடிப்பு பகுதி என்பது ஒரு ஆற்றுக்கு எந்தெந்த பகுதிகள் எல்லாம் மழை பெய்தால், தண்ணீர் அந்த ஆற்றுக்கு வருமோ அந்த பகுதி முழுவதும் அதனுடைய நீர்ப்பிடிப்பு பகுதி. சென்னை கொசஸ்தலை ,கூவம், அடையாறு, பள்ளிக்கரணை என நான்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ளடங்கியுள்ளது. 3 கழிமுகங்களையும், அதனருகில் அலையாத்தி காடுகளையும் கொண்டது.

இவை அனைத்தையும் நாசமாக்கி இன்று 2 பக்கெட் தண்ணீருக்கு நம்மை அலைய விடுவது யார் குற்றம்?

1efe631c-f48f-4057-858f-27a1e18a626b.jpeg