அன்பிற்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, நம்முடைய கொரோனா நோய் எதிர்ப்புக்கு செய்ய வேண்டிய அவசியமான மாற்றங்களைக் குறித்து அறப்போர் இயக்கத்தின் ஆலோசனைகள்.

photo6338998393615002047.jpg

  1. நம்முடைய தொழிலாளர்களில் ஏறக்குறைய 90லிருந்து 92% அமைப்புசாரா தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ஆயிரம் ரூபாய் என்பது தாங்கள் அறிவித்த ஒரு வாரகாலத்திற்கே போதுமானதல்ல, ஆனால் இப்போதோ 24 நாட்கள் [ மார்ச்22 முதல் ஏப்ரல் 14 வரை ] ஏறக்குறைய ஒரு மாதம் முழுமையாக வீட்டில் இருக்க வேண்டுமெனில் குறைந்தது 5,000 ரூபாய் தர வேண்டியது அவசியம். அதனையும் அவர்களின் வீட்டிற்கே சென்று நியாயவிலைகடை பொருட்களோடு சேர்த்து தர வேண்டியது அவசியம். அத்தோடு தமிழகம் முழுவதும் உள்ள வீடில்லாத மக்களையும், புலம்பெயர் தொழிலாளர்களையும் திருமண மண்டபங்கள், மால்கள், பள்ளிக்கூடங்கள் போன்ற காலியாக இடங்களில் ஒவ்வொரு ஏரியா வாரியாக தங்க வைக்க வேண்டிய அவசியம் உள்ளது . அவர்களுக்கு மூன்று வேளைக்கும் தேவையான சாப்பாட்டையும், அவசியமான பொருட்களையும் சேர்த்து கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

  2. காவல்துறையினர் தமிழகத்தின் பல இடங்களில் மருத்துவரை, விஏஓ, இன்னும் அவசிய பொருட்களை வாங்க சென்ற பொதுமக்களை அடித்த காட்சியை நாம் முகநூல் மூலமாகவும், தொலைக்காட்சி மூலமும் பார்க்க முடிகிறது. இதிலிருந்து தவிர்க்க பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டிய அவசியம் இல்லாமல் செய்ய வேண்டியது அவசியம். பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மருந்துகள், பால், இறைச்சிகள், மளிகை சாமான்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சேர்க்கும் முறையை அமல்படுத்தினால் அவர்கள் வெளியேற வேண்டிய அவசியம் இருக்காது. அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது, ஒட்டுமொத்தமாக மக்கள் நடமாட்டத்தையும் குறைப்பதற்கான வழி ஏற்படுத்த முடியும்.

அத்தோடு மளிகை சாமான்கள், காய்கறிகள், பழங்கள், இறைச்சிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விநியோக சங்கிலிகளை முழுமையாக பராமரிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. விவசாயிகள் ஒவ்வொரு நாளும் காய்கறி உற்பத்தி செய்தால் மட்டுமே மற்றவர்களுக்கு காய்கறிகள் கிடைக்கும். மற்ற அத்தியாவசிய பொருட்கள் எங்கெங்கு உற்பத்தி செய்யப்படுகிறதோ, அங்கிருந்து மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய வேலைகளையும் அரசாங்கம் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது . கடந்த 3 நாட்களாக மொத்தவிலை கடைகள், தொழிற்சாலைகள் அனைத்தும் முடங்கிய சூழ்நிலையில் விநியோக சங்கிலி முற்றிலுமாக தடைபடும் வாய்ப்புள்ளது . இதனை கருத்தில்கொண்டு மருந்துகள்,அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை இயக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அத்தோடு மளிகை பொருட்கள் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்களையும், இன்னும் காய்கறிகள் பழங்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளும் தொடர்ந்து இயக்க வேண்டிய அவசியம் உள்ளது. தேவைப்பட்டால் அதிகரிக்கவும் செய்யலாம். இவற்றில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் அவற்றை மக்களுக்கு உற்பத்தியாகும் இடத்திலிருந்து மக்களுக்கு கொடுக்க வேண்டிய வேலையை அரசாங்கமே கையிலெடுத்து செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கட்டுக்குள் இருப்பதையும் அரசாங்கம் உன்னிப்பாக கவனித்து , பராமரிக்க வேண்டும். [ டாடா ஏஸ் போன்ற சிறிய வண்டிகளில் அத்தியாவசிய பொருட்களை பாதுகாப்புடன், உரிய ஆலோசனைகளோடு வீடுகளுக்கே சென்று விற்பனை செய்வதன்மூலமும் மக்கள் வெளியேவருவதை தடுக்க முடியும்.]

  1. நம்முடைய கொரோனா நோய் எதிர்ப்புப் போரில் முன்கள படைவீரர்களாக இருக்கக்கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் இன்னும் பிற மருத்துவத் துறை சார்ந்த பணியாளர்கள், காவல்துறையினர், மிக முக்கியமாக தூய்மைப் பணியாளர்கள் அதுமட்டுமில்லாமல் நாம் ஏற்கனவே சொன்னபடி மருந்துகளையும், உணவுப்பொருட்களையும் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டி உற்பத்தி துறையில் வேலை செய்யக் கூடிய விவசாயிகள் ,விவசாயக் கூலிகள் ,தொழிற்சாலையில் வேலை செய்யும் பணியாளர்கள், முக்கியமாக போக்குவரத்து துறையில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்கள், காய்கறி ,மளிகை கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள், மொத்த கொள்முதல் செய்யும் வியாபாரிகள்,தன்னார்வலர்கள், மற்ற அரசாங்க ஊழியர்கள் முதற்கொண்டு அனைவருமே நம்முடைய முன்கள வீரர்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள். .இவர்கள் அனைவருமே நம்முடைய தமிழகத்தின் 8 கோடி மக்களும் கொரோனா பாதிக்காமல் நலமாக இருப்பதற்காகவும், பசியில்லாமல், பயமில்லாமல் இருப்பதற்காகவும், ஊரடங்கை முழுமையாக செயல்படுவதற்காகவும் பணியாற்றக்கூடிய முன்கள வீரர்கள். இவர்கள் அனைவருக்கும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை கொடுக்க வேண்டிய கட்டாயமும், கடமையும் அரசாங்கத்திடம் இருக்கிறது. அனைவருக்கும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை அதிகமாக உற்பத்திசெய்து, பாதுக்காப்பாளர்களுக்கு அவை தங்குதடையின்றி கிடைப்பதற்கான நிலைமையை ஏற்படுத்தினால் மட்டுமே வெளியில் மற்றவர்கள் வராதவாறு செய்ய இயலும்.

4.தென் கொரியாவும் சிங்கபூரும் உலகிற்கு இந்த கொரோனாவை எப்படி கட்டுப்படுத்துவதென்று காண்பித்துள்ளார்கள். வெறும் தனிமைபடுத்துதல் மற்றும் Social Distancing மூலமாக மட்டும் இல்லை. அதை தவிர அதிகப்படியான பரிசோதனை செய்வதன் மூலமாக அதை கட்டுப்படுத்தியுள்ளார்கள். தென் கொரியா 650 பரிசோதனை மையங்கள் வைத்து 3.5 லட்சம் பேருக்கும் மேலாக பரிசோதனை செய்து , அதாவது 1 மில்லியன் ஜனத்தொகைக்கு 6000 பேருக்கு மேல் பரிசோதனை செய்தார்கள். இந்தியாவில் இதுவரை 27688 பரிசோதனைகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. 1 மில்லியன் ஜனத்தொகைக்கு 20 பேர் மட்டுமே பரிசோதனை செய்தி வருகிறோம். ஆதலால் இந்த நாடுகளிடமிருந்து பாடம் கற்று உடனடியாக பரிசோதனைகளை பெருமளவு அதிகப்படுத்த தேவையான கட்டமைப்பையும் பரிசோதனை கருவிகளையும் ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். WHOவின் அதிகப்படியான சோதனைகள் செய்வதன் மூலம் கொரோனா தொற்றுள்ளவர்களை கண்டுபிடித்து, அவர்களை தனிமைப்படுத்தி, தரமான சிகிச்சை அளிப்பதன்மூலமே, கொரோனா பரவுவதை தடுக்கவும், ஒழிக்கவும் முடியும்.

முதலமைச்சர் அவர்கள் போர்க்கால அடிப்படையில் இவற்றை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே தமிழகம்கொரோனாவில் இருந்து முழுமையாக தப்பிக்கும்.