அறப்போர் இயக்கம் பற்றிய பொதுவான கேள்விகளும் அதற்கான விளக்கங்களும்:

1. அறப்போர் எதற்காக யாரால் துவங்கப்பட்டது?

அறப்போர் இயக்கம் 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதம் நீதியும் சமத்துவமும் நிலவும் சமூகத்தை உருவாக்க விரும்பிய சுமார் 25 இளைஞர்களால் சென்னையில் துவங்கப்பட்டது. நீதியும் சமத்துவமுமே நமது இந்திய அரசியல் சாசனத்தின் கனவாக இருக்கிறது. அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டுள்ள குறிக்கோளை நோக்கி வேலை செய்யவதற்காக அறப்போர் இயக்கம் நிறுவப்பட்டது.

2. அறப்போர் இயக்கம் தற்போது எந்த செயல்பாடுகளில் கவனம் செலுத்துகிறது ?

தன்னைச் சுற்றி இருக்கும் பிரச்சனைகளின் தீர்வுகளில் ஈடுபடக்கூடிய உயிரோட்டமான குடிமைச்சமூகத்தை ஒரு பெரிய மக்கள் இயக்கமாக உருவாக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளது. வலியவர்களும் மற்றவர்களும் பல விதங்களில் தனது பிரச்சனைகளை கையாண்டு கொள்கிறார்கள். ஆனால் எளியவர்களும் ஏழைகளும் நடுத்தரவர்க்கமும் குரலற்றவர்களும் அநீதியால் பாதிப்படையும்போது மக்களாக ஒன்றுதிரண்டு மட்டுமே தனது பிரச்சனைகளுக்கான தீர்வை அடைய முடியும் எனவும் அதனால் மக்கள் இயக்கம் அவசியமானது எனவும் அறப்போர் இயக்கம் முழுமையாக நம்புகிறது. ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்போது, அறப்போர் இயக்கம் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் ஒரு தன்னார்வல இயக்கமாக உருவெடுத்துள்ளது. அறப்போர் இது வரை பெரும்பாலும் சென்னையில், கீழ்க்கண்டவற்றில் வேலை செய்து வருகிறது: ஊழல் ஒழிப்பு, நீர்நிலைகள் பாதுகாப்பு குடி மக்கள் உரிமைகள் பற்றி பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வார்டுவாரியாக பிரச்சனைகள்.

3. அறப்போர் ஏன் ஊழல் எதிர்ப்பில் அதிக கவனம் செலுத்துகிறது?

இன்று அனைத்து துறைகளிலும் ஊழல் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக வியாபித்து இருக்கிறது. அதை கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் நீதியும் சமத்துவமும் நிலவும் சமுதாயம் அமைக்கும் கனவை நடைமுறை படுத்துவது சாத்தியமில்லாமல் போய்விடும். ஆகவே ஊழலை கட்டுக்குள் கொண்டு வர, கணிசமான அளவு குறைக்க, அறப்போர் இயக்கம் பாடுபடுகிறது. உயர்மட்ட அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியவர்களின் ஊழலை வெளிக்கொணர்தல், அதற்கான ஆதாரங்கள் வைத்து வழக்கு தொடுத்தல், பல்வேறுதுறைகளில் பொறுப்புடைத்தன்மை வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை கொண்டு வர பிரச்சாரம் செய்தல், சுற்றி நடக்கும் ஊழலை மக்கள் கேள்வி கேட்க ஊக்கப்படுத்துதல், வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புடைத்தன்மையையும் அதிகரிக்க தேவையான சட்டங்களுக்காக அழுத்தம் கொடுத்தல் போன்ற செயல்பாடுகளில் அறப்போர் இயக்கம் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. லோக்ஆயுக்தா ஊழல் ஒழிப்பு சட்டம், சேவை பெறும் உரிமைச் சட்டம, தகவல் அறியும் உரிமை சட்டம் மாற்றாமல் இருத்தல், நகரத்தில் வார்டு கமிட்டி உருவாக்குதல் போன்ற விஷயங்களில்அறப்போர் இயக்கம் தன் பக்க ஆலோசனைகளை வழங்கி உள்ளது.

4. சட்டம் பற்றியும் அரசியலமைப்பு பற்றியும் அறப்போர் இயக்கத்தின் பார்வை என்ன?

இந்திய அரசியலமைப்பு சட்டம், நமது அரசியலமைப்பின் தாத்பர்யம், அரசியலமைப்பு உத்தரவாதம் அளித்திருக்கும் மக்களின் அடிப்படை உரிமைகள் அகியவற்றின் மீது அறப்போர் இயக்கம் முழு நம்பிக்கை வைத்துள்ளது. ஆதாரம் மற்றும் உண்மையின் கரம் பிடித்து அநீதிகளை அகிம்சை வழியில் எதிர்த்து போரிடுகிறது. அநீதி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை மக்களாகிய நாம் போரிட்டு வெல்ல வேண்டியுள்ளது. அப்படி போரிடுவதற்கு சட்டபூர்வமாக, தார்மீக அடிப்படையில், ஒழுக்க அடிப்படையில் மட்டுமல்ல, வியூக ரீதியிலும் அகிம்சையே சிறந்த வழியாக அறப்போர் இயக்கம் பார்க்கிறது. ஒரு பக்கம் அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மீது ஊழல் எதிர்ப்பு, வழக்கு தொடுத்தல், போராட்டம் செய்தல் ஆகியவற்றை செய்தாலும், இன்னொரு பக்கம் அரசு வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையுடன் நடந்து கொள்வதற்கு தேவையான மாற்றங்களை எடுத்து வருவது தொடர்பாக அரசிடம் தொடர்ந்து பேசியும் அறிவுறுத்தியும் வருகிறது அறப்போர் இயக்கம்.

5. அறப்போர் இதுவரை செய்தது என்ன ?அறப்போரின் சாதனைகள் என்று சிலவற்றை சொல்ல முடியுமா ?

கடந்த 4 ஆண்டுகளில் பல முக்கிய மாற்றங்களுக்கு அறப்போர் அடித்தளம் இட்டுள்ளது

  • தமிழக்கத்தின் ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறை 2014 [DVAC]ஆம் ஆண்டு முதல் ஜூலை 2017 வரை ஓரு திடீர் சோதனை கூட செய்யவில்லை. திடீர் சோதனை என்பது ஊழல் மற்றும் லஞ்சைத்தை கட்டுபடுத்த உதவும் முக்கிய வழிகளில் ஒன்று.இது சம்பந்தமாக ஜூலை 2017 முதல் செப்டம்பர் 2017 வரை அறப்போர் செய்த தொடர் பிரச்சாரங்களின் விளைவாக DVAC ஆகஸ்ட் 2017 முதல் மார்ச் 2019 வரை சுமார் 200 அதிரடி சோதனைகள் நடத்தியது!

  • தமிழ்நாடு மின் துறை (TANGEDCO) செய்த நிலக்கரி இறக்குமதி ஊழலை அறப்போர் வெளிக் கொண்டு வந்தது .TANGEDCO தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒரு மெட்ரிக் டன் நிலககரிக்கு சந்தை மதிப்பிற்கு மேலாக 20$ கொடுத்து வாங்கி வந்தது.இதனால் 2012 முதல் 2016 வரை அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் 6000கோடி. இதன் பிறகு TANGEDCO தனது கொள்முதல் கொள்கையை மாற்றி ரிவர்ஸ் bidding என்ற முறையை அறிமுகப்படுத்தியது. இதனால் ஒரு மெட்ரிக் டன் நிலக்கரி சந்தை மதிப்பை விட 15$ குறைவாக வாங்க முடிந்தது.இதன் மூலம் தமிழக அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் சேமித்தது!

  • சென்னை மாநகராட்சியில் அமைச்சர்கள் அவர்களின் சகாக்கள் மற்றும் சில ஒப்பந்ததாரர்கள் கூட்டு அமைத்து செய்த ஒப்பந்த ஊழல்களை அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டு வந்தது. இதனால் சுமார் 200 கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஊக்குவிக்கப்பட்ட மாநகராட்சியின் பல நேர்மையான பொறியாளர்கள், ஊழலுக்கு துணை போகும் தங்கள் மேலதிகாரிகளின் அழுத்தத்தையும் மீறி பல திறந்த ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்டனர்.

  • நீர்நிலைகள் தொடர்பாக அறப்போர் இயக்கம் செய்த பல வேலைகளின் காரணமாக நீர்நிலைகளின் முக்கியத்துவம் மற்றும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு மிகப்பெரிய அளவில் மக்களிடம் ஏற்பட்டது. குறிப்பாக அறப்போர் இயக்கம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வில்லிவாக்கம் ஏரி தொடர்பாக தொடுத்து வெற்றி பெற்ற வழக்கு மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் வில்லிவாக்கம் ஏரியில் ஆக்கிரமிப்பு செய்து மெட்ரோ ரயில் கட்டட கழிவுகளை கொட்டியது. அறப்போர் இயக்கம் தொடுத்த வழக்கில் இந்த கழிவுகளை அப்புறப்படுத்தி ஏரியை புனரமைக்குமாறு தீர்ப்பு வந்ததை தொடர்ந்து தற்போது சென்னை மாநகராட்சி வில்லிவாக்கம் ஏரியை புனரமைத்து வருகிறது.

  • சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 18 நோயாளிகளுக்கு மருத்துவமனையின் அலட்சியம் காரணமாக மஞ்சள் காமாலை நோய் தொற்றியது. அறப்போர் இயக்கத்தின் தொடர் சட்ட போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவமும், 5 நோயாளிகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இது சம்பந்தமாக அறப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களில் 15 நபர்களுக்கு தற்காலிக நஷ்ட ஈடாக ஐந்து லட்சம் தரப்பட்டுள்ளது. இறுதி நஷ்ட ஈடு தொடர்பான வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

6. அறப்போர் தங்கள் செலவுகளை எவ்வாறு சமாளிக்கின்றது ? அறப்போர் எவ்வாறு நிதி திரட்டுகிறது ?

இயக்கத்தின் செலவுகள் இயக்கத்தின் பொது மக்களின் நன்கொடை மூலமாகவே செய்யப்படுகிறது. அறப்போர் ஒரு இயக்கமாக, தனியார் நிறுவனங்கள் அல்லது அமைப்புகளின் நிதி பங்களிப்பு இல்லாமல் முழக்க முழுக்க பொதுமக்களின் நன்கொடையில் இயங்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக உள்ளது. அரசாங்கத்திடம் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடமையை வலியுறுத்தும் அறப்போர் தன்னளவில் அதை கடைபிடிப்பது முக்கியமானதாகும். ஆதலால் எங்களின் நன்கொடைகள், நன்கொடையாளர்கள் செலவு தணிக்கை விவரங்கள் வருமானவரி விவரங்களுடன் வருடவாரியாக எங்கள் இணையதளமான www.arappor.org ல் வெளியிடபட்டுள்ளது.

7. அறப்போரில் தன்னார்வலராக இணைவது எப்படி ?

எங்கள் www.arappor.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது எழும்பூரில் உள்ள எங்கள் அலுவலகத்திற்கு நேரில் வரலாம். தங்களுடைய திறமை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப வேலைகளை பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் உங்கள் பகுதிக்கு/வார்டுக்கு பொறுப்பேற்று அந்தப் பகுதி பிரச்சனைகளை தீர்க்க உதவலாம், உங்கள் பகுதியில் உள்ள நீர்நிலைகளை மீட்டெடுக்க உதவலாம், அறப்போர் இயக்கம் நடத்தும் பிரச்சாரங்கள்,போராட்டங்கள் பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றுக்கு உதவலாம், அல்லது கணினி மூலம் வீட்டிலிருந்தபடியே உதவலாம். அறப்போர் இயக்கம் தொடர்ந்து நடத்திவரும் "know your rights" விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொள்வது தன்னார்வலர்களாக இணைய விரும்புவர்களுக்கு ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும்.

8. அறப்போரின் செயல்கள் அரசாங்கத்திற்கு எதிரானதா ?

அறப்போர் இயக்கத்தின் கூட்டணி இந்திய அரசியலமைப்பு சாசனம்,நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றுடன் மட்டுமே.அறப்போர் எதிர்ப்பது அரசாங்கத்தை அல்ல,அரசாங்கத்தில் இருக்கும் ஊழல் மற்றும் ஊழல்வாதிகளின் தவறான நிர்வாகத்தை மட்டுமே.கடந்த 4 வருடங்களில் அறப்போர் பல சமயங்களில் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றியிருக்கிறது2016 பருவ மழை தொடங்கும் முன்பு அறப்போர் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து மழைநீர் வடிகால் குறித்த பிரச்சினைகளை தீர்க்க பணியாற்றியுள்ளது.நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக அறப்போர் தொடர்ந்து சென்னை மெட்ரோ வாட்டர் துறையுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

9. அறப்போர் இயக்கம் ஏதாவது அரசியல் கட்சியை ஆதரிக்கிறதா ?

அறப்போர் இயக்கம் மக்கள் அரசியல் சார்ந்தது.நாங்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவதில்லை.இரு தேர்தல்களுக்கு இடையில் இருக்கும் மக்களின் பிரச்சினைகளும் அரசியலுமே அறப்போர் இயக்கத்துடையது ,தேர்தல் நேரத்தில் அல்ல. இதனால் அறப்போர் இயக்கம் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிப்பதில்லை. இதுவரை எந்த அரசியல் கட்சியையும் ஆதரித்ததும் கிடையாது. தேர்தல் நேரங்களில் ,அறப்போர் ஒரு தகவலறிந்த\விழிப்புணர்வு அடைந்த வாக்களர்கள் சமூகத்தை உருவாக்கும் பொருட்டு தேர்தலில் போட்டியிடும் வாக்காளர்களின் சோத்து மற்றும் குற்றவியல் விவரங்களை தொகுதிவாரியாக வாக்களர்களுக்கு தெரிவிக்கிறது.

10. அறப்போர் ஆளும் கட்சியினரின் ஊழல் குறித்து மட்டுமே பேசுவது ஏன் ? அறப்போர் இயக்கத்தின் பின்ணணியில் ஏதேனும் அரசியல் கட்சி உள்ளதா ?

ஒரு மக்கள் இயக்கமாக நாம், மக்களின் இன்றைய பிரச்சினைகள் குறித்து கவனிப்பது முக்கிரம்.அரசு அதாகாரிகள் மற்றும் தேர்ந்தெடுக்கபட்ட அரசியல் உறுப்பினர்களை கேள்வி கேட்பதும் அவர்களுடன் இணைந்து பணிபுரிவதும் அனைத்து குடிமக்களின் முக்கியமான கடமையாகும்.மக்களுக்காக பணிகளை திறம்பட செய்வது தேர்ந்தெடுக்கபட்ட ஆளுங்கட்சியின் கடமையாகும்.ஆதலால் அவர்களிடம் கேள்விகள் கேட்கபடுவது இயற்கையே.இதனால் நாங்கள் எப்பொழுது ஆளுங்கட்சியின் ஊழல்,தவறான நிர்வாகம் குறித்த கேள்வி எழுப்பினாலும் ,ஆளுங்கட்சியின் ஆஊரவாளர்கள் எங்களை எதிர்கட்சியின் முகவர்கள்/ஆதரவாளர்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.ஒர் இயக்கமாக அறப்போர் எப்பொழுதும் ,யார் ஆட்சி செய்தாலும்,உண்மையை அதிகாரத்திற்கு உறக்க கூறுவதை தன் கடமையாக கருதுகிறது. இதனால் எதிர்கட்சிகளோ மற்ற கட்சிகளோ ஊழலற்றவர்கள் என்று அர்த்தமல்ல.2G,INX media,ஆக்கரமிப்பு என்ற மற்ற கட்சிகளின் ஊழல்களை எதிர்த்தும் அறப்போர் குரல் கொடுத்துள்ளது.மேலும் பல தருணங்களில் ஊழல்களில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி கூட்டணியாக செயல்படுகின்றன என்பதை அறப்போர் இயக்கம் வெளிக்கொணர்ந்துள்ளது.

11. அறப்போர் யாருடயை "B" டீம் ?

சில அதிமுக மற்றும் பிஜேபி ஆதரவாளர்கள் அறப்போர் இயக்கம் திமுகவின் "B" டீம் என்றும் சில திமுக ஆதரவாளர்கள் அறப்போர் பாஜகவின் "B" டீம் என்றும் கூறி வருகிறார்கள். அறப்போர் இயக்கம் அரசியல் கட்சிகள் செய்யும் ஊழல் மற்றும் நிர்வாக குளறுபடிகளை ஆதராத்துடன் வெளிகொண்டுவரும்பொழது அந்த கட்சியின் ஆதரவாளர்கள் பதிலளிக்க முடியாமல் , அறப்போர் இயக்கத்தின் மீது ஆதரமற்ற குற்றசாட்டுகளையும் பல பொய்யான பரப்புரைகளையும் மேற்கொள்கின்றனர். அறப்போர் இயக்கம் பொதுமக்களின் "A","B" மற்றும் "C" டீம் என்று சொல்வதே பொறுத்தமானதாக இருக்கும்.

12. அறப்போர் சென்னை மாநகராட்சியில் மட்டுமே கவனம் செலுத்துவது ஏன் ?

சென்னை மாநகராட்சியில் நேர்மையாக டென்டர் விடப்படாமல் முன் முடிவு செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் எப்படி நம் கஜானாவுக்கு நூற்றுக் கணக்கான கோடி இழப்பை ஏற்படுத்தி இருக்கின்றன என அறப்போர் இயக்கம் பல முறை காண்பித்திருக்கிறது. மற்றவர்கள் போல ஊழல்களை பார்த்தால் ஒரு புகார் அளித்துவிட்டு ஒதுங்கிக்கொள்தல் எளிதாக இருக்கலாம் ஆனால் அது நெடுநாளைய தீர்வாகாது என அறப்போர் நம்புகிறது. சென்னை மாநகராட்சி 5000 கோடி நிதி ஒதுக்கீட்டை கொண்டது மட்டுமல்ல. சென்னையில் வாழும் நம் ஒவ்வொருவரின் தினசரி வாழ்வையும் பாதித்துக் கொண்டிருப்பது. சென்னையில் நாம் தினசரி சந்திக்கும் பெரும்பாலான பிரச்சனைகளான சாலை, வெள்ளநீர் வடிகால், குப்பை, கழிவுநீர், பூங்காக்கள், பொது கழிப்பிடம், நீர்நிலைகள், அரசு பள்ளிகள், அரசு சுகாதார மையங்கள், திறந்த வெளிகளின் அளவு ஆகிய அனைத்துக்கும் பொறுப்பு சென்னை மாநகராட்சி ஆகும். அப்படிப்பட்ட மாநகராட்சியில் பெரும்பாலான ஒப்பந்தங்கள் சட்டத்திற்கு புறம்பாக கூட்டுசதி செய்யப்பட்டு ஒரு சில ஒப்பந்ததாரர்களுக்கே அளிக்கப்படுகிறது. இந்த ஊழல்களால் பாதிக்கப்படுவது நாம்தான். உதாரணமாக இன்று சாலை உயரம் நம் வீட்டின் தரை உயரத்தை விட அதிகமாக இருப்பதும் அதனால் மழைக்காலங்களில் தண்ணீர் நம் வீட்டுக்குள் புகுவதும் சாலை போடுவதில் நடக்கும் ஊழல்களின் நேரடி பாதிப்பு என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இங்ஙனம், சென்னை மக்கள் நல்வாழ்வில் சென்னை மாநகராட்சியின் செயல்பாடுகள் முக்கிய பங்கு வகிப்பதால் அறப்போர் இயக்கத்தில் நாம் சென்னை மாநகராட்சியில் பலகாலம் தொடர்ந்து வேலை செய்ய திட்டமிடுகிறோம். சென்னை மாநகராட்சியில் டென்டர் விடும் முறைகளை மேம்படுத்தல், அரசை வார்டு கமிட்டி அமைக்க வைத்து நகர சபை மூலம் அரசின் முடிவுகளில் மக்கள் பங்களிப்பு கொணர்தல், செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை பொறுப்புடைத்தன்மையை அதிகரித்தல் என பல வருடங்களுக்கு செயல் திட்டங்கள் அறப்போருக்கு உள்ளது. மொத்தத்தில் சென்னையை அனைத்து தரப்பு மக்களும் மகிழ்வாக வாழும் ஒரு இடமாக மாற்ற விரும்புகிறோம்.

13. அறப்போர் எப்போது பிற மாவட்டங்களுக்கு வரும்?

தற்போது சென்னையின் ஒவ்வொரு வார்டிலும் குழு அமைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த பணி கணிசமான அளவு நிறைவடைந்ததும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அறப்போர் இயக்கத்தை விரிவாக்கம் செய்ய உள்ளோம்.