2.png

பல்லாவரம் புத்தேரியில் 10 லாரிகள் வைத்து குப்பை கொட்டிய கயவர்கள் மீது அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரை ஒரு வாரத்திற்கும் மேலாக இழுத்தடித்து கடைசியாக FIR (S5 Ps Crno.07/2021 U/S 277 IPC) பதிவு செய்துள்ளார் S5 காவல்நிலைய ஆய்வாளர் இளங்கோவன்.

கொட்டியது யார் என்று இன்ஸ்பெக்டருக்கு அடையாளம் தெரியவில்லையாம். ஆனால் கொட்டிய லாரி உரிமையாளரிடம் பல்லாவரம் நகராட்சி ஏற்கனவே 25000 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது. அவர்களிடம் கேட்டிருந்தால் சொல்லி இருப்பார்களே இன்ஸ்பெக்டர். மேலும் இந்த ஏரி இருக்குமிடத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு காமெராக்களை ஒரு முறை பார்த்திருந்தாலே கொட்டிய லாரிகள் அனைத்தையும் கண்டுபிடித்து இருக்கலாமே. அந்த லாரிகளுக்கு பாதுகாப்பாக வந்த கட்சி கொடி வைத்த காரையும் அடையாளம் கண்டுபிடித்து இருக்கலாமே. இதுவும் இல்லை என்றால் லாரிகள் கொட்டிய குப்பைகளை ஏரி உள்ளே தள்ளிய JCB இயந்திரத்தை காவல்நிலையத்தில் பிடித்து வைத்து விசாரணை செய்தீர்களே அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? இதை எதையும் செய்யாமல் இப்பொழுது ஒரு வழக்கு பதிவு செய்திருக்கிறார் இன்ஸ்பெக்டர் இளங்கோவன்.

அப்படி ஒரு வலுவான வழக்கு அது.. இந்த வழக்கில் குற்றவாளியை பிடித்து அவருக்கு வாங்கி தரப்போகும் தண்டனை வெறும் 500 ரூபாய் அபராதம். அடேங்கப்பா ஒரு ஏரியில் 10 லாரி குப்பைகளை கொட்டுபவர்களுக்கு தமிழகத்தில் வெறும் 500 ரூபாய் தான் அபராதம் என்று தெரிந்தால் ஆக்கிரமிப்பாளர்கள் எத்தனை மகிழ்ச்சி அடைவார்கள் தெரியுமா இன்ஸ்பெக்டர் இளங்கோவன்? இன்ஸ்பெக்டர் சார், Sec 24 A(b) of 1974 Water Actஐ பயன்படுத்தி நீங்கள் வழக்கு தொடர்ந்தால் நீர்நிலைகளை அசுத்தப்படுத்துபவர்களுக்கு 6 வருடம் வரை சிறை தண்டனை வாங்கி தரலாம் என்று உங்களுக்கு தெரியுமா? ஒரு வேளை இந்த சட்டத்தை பற்றிய விழிப்புணர்வு உங்களுக்கு இது வரை இல்லாமல் இருந்திருந்தால் இனியாவது அதை கற்றுக்கொண்டு நீர்நிலைகளை பாழ்படுத்தும் கயவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் நடவடிக்கை எடுக்கும் வரை அறப்போர் தொடரும்..