அரசாங்கம் டெண்டர் முறையை பின்பற்றுவதற்கு முக்கிய காரணம் குறைவான செலவில் தரமான வேலைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தான். இதை மனதில் வைத்து தான் டெண்டர் நிபந்தனைகள் உருவாக்கப்பட வேண்டும். அப்பொழுது தான் டெண்டர் கொடுப்பவர்களிடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி குறைந்த செலவில் பணிகளை செய்து முடிக்க முடியும். ஆனால் டெண்டர் நிபந்தனைகள் தொடர்ந்து அரசியல்வாதிகளுடன் இணைந்து செட்டிங் செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாகவே உருவாக்கப்படுகின்றன. தற்பொழுது சென்னை மாநகராட்சியால் விடப்பட்டுள்ள சாலை டெண்டர்களில் எந்த நிபந்தனைகளை மாற்றினால் ஆரோக்கியமான போட்டியை உருவாக்க முடியும் என்று குறிப்பிட்டு அறப்போர் இயக்கம் தமிழ்நாடு அரசுக்கு மனு அனுப்பியுள்ளது.

  1. சென்னை மாநகராட்சி இந்த முறை டெண்டர்களை 1 கோடி மற்றும் அதற்கு குறைவான பேக்கேஜ் டெண்டர்களாக கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் கொடுக்கப்பட்ட டெண்டர்கள் 25 கோடி பேக்கேஜ்கள் வரை கொடுக்கப்பட்டதில் இருந்து இந்த மாற்றம் நடந்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் இதில் ஒரு நிபந்தனையாக 1 கோடி ரூபாய் டெண்டர் எடுக்க 40 லட்சம் மதிப்பில் ஒரே டெண்டரில் வேலை செய்திருக்க வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. இதையும் கடந்த 5 வருடத்தில் செய்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. கடந்த 8 வருடங்களாக செட்டிங் டெண்டர்கள் மூலம் அதிக தொகைக்கு டெண்டர் எடுத்தவர்கள் மட்டுமே இந்த போட்டியில் கலந்து கொள்ளும் வகையில் இந்த நிபந்தனை அமைந்திருப்பதால் இந்த அனுபவ கால அளவை 12 வருடங்கள் என்று மாற்ற வேண்டும். மேலும் 40% ஒரே டெண்டரில் செய்திருக்க வேண்டும் என்றுள்ளதை பல டெண்டர்கள் இணைந்து 40% செய்திருக்க வேண்டும் என்று மாற்ற வேண்டும். இந்த மாற்றங்களின் மூலம் செட்டிங் டெண்டர் ஒப்பந்ததாரர்களுக்குள் போட்டியை உருவாக்கி டெண்டர்கள் செட்டிங் செய்யப்படுவதை தடுக்கலாம்.

1.png

  1. 9M Sensor Paver இருந்தால் தான் டெண்டர் எடுக்க முடியும் என்ற நிபந்தனை நீக்கப்பட வேண்டும். ஏற்கனவே கடந்த வருடங்களில் இந்த நிபந்தனையுடன் போடப்பட்ட டெண்டர்களில் 9M அகலத்திற்கு சாலைகள் அமைக்கப்படவில்லை. மேலும் 9M அகலத்திற்கு இணைப்பு இல்லாமல் அமைக்க ஏதுவான சாலைகள் சென்னையில் அதிகமாக இல்லை. பெரும்பாலான சாலைகள் நடுவே தடுப்புடன் இருப்பதால் 9M அகலம் இருப்பது மிகவும் அரிது. தேவையே இல்லாத இந்த நிபந்தனை மூலம் 9M Sensor paver இல்லாத பல ஒப்பந்ததாரகள் போட்டியில் இருந்து விலக்கப்படுகிறார்கள். இந்த sensor paver வைத்திருக்கும் ஒரு சில ஒப்பந்ததார்கள் மட்டுமே போட்டியிடுவதால் டெண்டர்கள் செட்டிங் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.

2.png

  1. ஒரு சாலை அமைத்தால் அடுத்த 3 வருடங்களுக்கு அந்த சாலை பராமரிப்பு அந்த ஒப்பந்ததாரர் பொறுப்பு. அப்படி 3 வருடத்திற்குள் அந்த சாலை சேதமடையும் பட்சத்தில் அந்த ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும். மேலும் அந்த ஒப்பந்ததாரர் அதற்கு பிறகு அரசாங்க டெண்டர்கள் எடுப்பதில் இருந்து தடை செய்யப்பட வேண்டும். இதை செய்தால் மக்களுக்கு தரமான சாலைகள் கிடைப்பதை உறுதி செய்யலாம்.

3.png

  1. 14 கான்கரீட் சாலைகள் பழைய சாலை உயரத்தை விட கிட்டத்தட்ட 2' அதிக உயரத்தில் அமைக்கும் படி டெண்டர் போடப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. சாலை உயரங்கள் அதிகரிக்கப்பட கூடாது என்று அரசாங்கமே உத்தரவு போட்டுவிட்டு 2' சாலை உயரத்தை அதிகரிக்கும் வகையில் போடப்பட்டுள்ள டெண்டர் நிபந்தனை மாற்றப்பட்டு பழைய உயரத்திற்கே புதிய சாலைகள் அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

4.png

இந்த நிபந்தனைகளை மாற்றுவதன் மூலம் மக்களுக்கு தரமான சாலைகளும், அரசாங்கத்துக்கு குறைந்த செலவில் சாலைகளும் கிடைக்கும்.

https://www.dtnext.in/News/City/2021/12/14031830/1333725/Modify-tender-norms-for-road-repair-works-NGO-Arappor-.vpf